உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 5
மனித குலத்தின் அறிவியல் பார்வை பவ்தீகப் பொருட்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அப்பால் செல்ல முடியாது எனக் கண்டோம். உள்ளபடியே இது நமது அறிவியல் அறிவின் இயல்பாகும். நமது அறிவியல் அறிவு என்பது ஒரு எல்லைக்குட்பட்ட கலையாகும்.
சான்றாக, ஏதேனும் ஒரு பொருளின் அறிவியலை நாம் அறிய வேண்டுமானால் அப்பொருள் நமது ஐம்புலண்களில் ஏதேனும் ஒன்றுக்குப் புலப்பட வேண்டும். அப்போது மட்டுமே நமது பகுத்தறிவால் அதன் அறிவியலை நம்மால் கண்டு பிடிக்க முடியும்.
நமது புலனறிவுக்கு உட்பட்டவை களை நாம் ''பவ்தீக'' அல்லது ''ஸ்தூல'' உலகினைச் சார்ந்தவை எனக் கூறுகிறோம். அதே நேரத்தில் நமது புலனறிவுக்குப் புலப்பாடாமல் இருப்பவைகளை நாம் ''ஸ்தூல உலகைச் சாரா தவை'' அல்லது ''அபவ்தீகமானவை'' என்று கூறுகிறோம்.
பொருட்களையும், நிகழ்ச்சிகளையும் மேற்கண்டவாறு நாம் இரண்டு வகைகளாகத் தரம் பிரிக்கும்போது அபவ்தீகப் பொருட்களோ அல்லது நிகழ்ச்சிகளோ புலனறிவுக்கு அப்பாற்பட்டவை இல்லவே இல்லை எனக் கூறுகிறது நாத்திகச் சித்தாந்தம். இதுவே நாத்திக சித்தாந்தத்தின் அடிப்படை அறியாமையாகும்.
மனிதனின் புலனறிவுக்கு அப்பாற்பட்ட ஓர் உலகம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால் அது கடவுட் கோட்பாட்டிற்கு சாதகமாக அமைந்து விடும் என்ற அச்சம் நாத்திக சித்தாந்தத்தைக் கதி கலங்கச் செய்கிறது.
இந்தக் கலக்கமே புலனறிவுக்கு அப்பாற்பட்ட உலகின் உள்ளமையை நாத்திகத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும்படிச் செய்கிறது. ஆத்திகர் ஒருவர் கடவுள் உண்டு எனக் கூறினால் அதற்குப் பதிலாகக் கடவுளா? அப்படி ஒருவர் இருக்கிறாரா? எங்கே காட்டு? என நாத்திகர்கள் கூறுவது இதற்கொரு தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டாகும்.
கடவுள் உண்டென்றால் பகுத்தறிவாளிகள் எனத் தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் நாத்திகர்களின் புலனறிவுக்கு கடவுளும் உட்பட்டவராக இருக்க வேண்டுமாம்! அப்போது தாம் கடவுள் இருப்பது உண்மையாகுமாம்! இதுவே நாத்திக வாதத்தின் உட் பொருளாகும்.
புலனறிவுக்கு உட்பட்டவைகளை மட்டுமே நம்புவதுதான் பகுத்தறிவா? விலங்குகள் கூட புலனறிவிற்கு உட்பட்டவைகளை நம்புகின்றன.
எனவே அவைகளும் நாத்திகர்களைப் போன்று பகுத்தறிவுள்ளவைகளா? வெட்கக் கேடு! ''பகுத்தறிவாளிகளாகக் காட்சியளிக்கும் நாத்திக முகம் கடைந்தெடுத்து வர்ணம் பூசிய பொய் முகமாகும்'' என யாரேனும் கூறினால் அதில் என்ன தவறு?
அபவ்தீக உலகின் ஆதாரங்கள்
நாம் வாழுகின்ற இந்த பவ்தீக உலகில் அபவ்தீக உலகின் தலையீடு உண்டென்றால் அதற்கான அறிவியல் ஆதாரம் காட்ட வேண்டும் என நாத்திகச் சித்தாந்தம் குதர்க்கம் செய்வது மனித குலம் பெற்றுள்ள பவ்தீக அறிவியல் அறிவின் இயற்பியலைப் புலனறிவுக்கு அப்பால் செல்ல இயலாத நிலையை பற்றிய அவர்களின் அறியாமையே என்பதும், அந்த அறியாமையே நாத்திகத்தின் தோற்றுவாய் என்பதையும் கண்டோம்.
இந்த விளக்கம் உண்மையென்றால் ஆன்மீக நம்பிக்கையைச் சார்ந்த அபவ் தீகச் செய்திகள் ஒவ்வொன்றிற்கும் அறிவியல் ஆதாரம் கேட்கும் நாத்திகத்தின் நிலை முட்டாள் தனம் மட்டுமன்றி வடிகட்டிய பைத்தியக் காரத்தனம் என்பதும் தெளிவாகும். ஆனால் அபவ்தீகச் செய்திகளின் அறிவியலைக் குறித்து நாம் கூறிய விளக்கம் எந்த அளவிற்கு உண்மை என்பதில் சில வாசகர்கள் இன்னமும் ஒரு வகையான ஐயத்தில் இருக்கக்கூடும். அதையும் நிவர்த்தி செய்து விட்டால் நாத்திகர்களின் அறிவியல் பாசாங்கால் யாரும் குழப்பமடைய மாட்டார்கள். எனவே அதற்குரிய சில அறிவியல் ஆதாரங்களைப் பார்ப்போம்.
அபவ்தீக உலகின் தனித்தனியான நிகழ்ச்சிகளின் அறிவியலை நமது பவ்தீக அறிவியலால் அறிந்து கொள்ள இயலாது எனினும் அப்படி ஒரு உலகம் உண்டு என்பதைச் சில பத்தாண்டுகளுக்கு முன் நடைபெற்ற அறிவியல் கண்டு பிடிப்புக்களிருந்து தெரிய வந்துள்ளன. அவற்றுள் ஒன்று இப்பேரண்டத்தின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்பில் காணப்படுகிறது.
பதிலடி தொடரும் இன்ஷா அல்லாஹ்...
- ஏ.கே. அப்துர் ரஹ்மான், விஞ்ஞானி
0 comments:
Post a Comment