Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Tuesday 21 September, 2010

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் மதச்சார்பற்ற அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது எந்த ஒரு நபரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றலாம். வழிபடலாம். எந்த ஒரு நபரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற இந்திய சட்டத்தில் இடமுண்டு.

அதுபோல் மத உரிமை என்றாலும், எழுத்துரிமை என்றாலும், பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்புக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும். சுதந்திர இந்தியா என்று அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மற்றவரின் மனம் புண்படும் வகையிலும், மற்றவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும்தான் உரிமைகள் உள்ளன.

மற்றவருக்கு கேடு விளைவிக்கும் வகையில் எந்தக் காரியத்தையும் செய்ய அனுமதியில்லை. அப்படி செய்பவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கும். இப்படி செய்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.

ஆனால் பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத துவேஷ சம்பவங்களைப் பார்க்கும்போது பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு ஒரு சட்டமாகவும், சிறுபான்மையினராக இருக்கும் முஸ்ம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டமாக இருந்து வருகிறது.

இந்துக்களின் கடவுளாகக் கருதப்படும் விநாயகரின் பிறந்த நாள் விழா இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இது மற்றவர்களின் அறிவுக்குப் பொருந்தாததாகத் தோன்றினாலும் பிள்ளையாரைக் கடவுள் என்று நம்புவோர் அதைக் கொண்டாடினால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

அதுபோல் கடவுள் என்று கூறி வழிபாடு நடத்தி விட்டு அவரையே கடல் வீசி எறிந்து, கை கால்களை முறித்து கால்களால் மிதித்து கரைப்பதுதான் அவர்களின் மத வழிபாடு என்றால் அதிலும் யாரும் தலையிட முடியாது. அவர்களின் மத உரிமை என்றுதான் மற்றவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் விநாயகர் பிறந்த நாள் என்ற பெயரில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்க முயன்றால் அதற்கு சட்டத்தில் யாருக்கும் அனுமதி இல்லை. நடைமுறையிலேயே இந்த எல்லைக் கோடு அப்பட்டமாக மீறப்படுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு விநாயர் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

இந்தச் சிலைகள் அனைத்தும் பெரும்பாலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் பொருளால் தயார் செய்யப்படுகின்றன. மண்ணால் செய்யப்படும் சிலைகள் ரசாயம் கலந்த பெயிண்ட் பூசப்படுகின்றன.

மாசு கட்டுப்பாடு வாரியமும், காவல்துறையும் மண்ணால்தான் சிலை செய்ய வேண்டும்; பெயின்ட் பூசக் கூடாது; அப்படி இருந்தால் அனுமதி இல்லை என்று பத்திரிகைகளில் விடும் அறிக்கைகள் அனைத்தும் புளுகு மூட்டைகளாகும். சட்டத்தின் முன்னால் தான் நிற்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு அறிக்கை விடுகின்றனர். ஆனால் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் வகையில்தான் சிலைகள் தயாரிக்கப்பட்டு கரைக்கப்படுகின்றன.

நீர் நிலைகளில் கரைக்கப்படுவதால் அதில் வாழும் மீன்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த மீன்களை உணவாக உட்கொள்பவர்களுக்கும் கூட கேடுகள் ஏற்படுகின்ன. கிணறுகளில் போடப்படுவதால் அந்தத் தண்ணீர் தரமற்றதாக ஆவதுடன் ஊற்றுக் கண்களும் அடைபட்டுப் போகின்றன.

குளம், குட்டைகளில் கரைக்கப்படுவதால் அந்த நீரும் மனிதர்கள் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறி விடுகின்றன. நிலம் தண்ணீரை உறிஞ்சுவதற்கு தடை ஏற்படுவதால் நிலத்தடி நீர் மட்டமும் குறைகின்றது.
இப்படி அனைத்து மதத்தவரின் ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடனும் போர் செய்வது மத உரிமையில் எப்படி அடங்கும் என்று தெரியவில்லை.

சமீபத்தில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்ம்களைப் புண்படும் வகையில் சங்பரிவாரத்தினர் ஈடுபட்டுள்ளனர். இது அவர்களுக்குப் புதிதல்லவே. ஆனால் இந்துக்களிடம் நண்பர்களாகப் பழகும் முஸ்ம்கள் இதுபோன்ற சங்பரிவார சக்திகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சென்னையில் வைக்கப்பட்ட கண்காணிப்பு பலூன் 
சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கூட வரம்பு மீறப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து இரண்டு காவல்துறையினரை வெட்டி உள்ளனர். இது குறித்து எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. ஏனென்றால் இது ஆளும்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படும் என்பதால்தான்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்ம்களைக் கேவலப்படுத்தி அவர்களின் மனம் புண்படும்படி வசைமாறிப் பொழிந்து, ஆடல் பாடலுடன் இந்த ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதைத்தான் இந்து மதம் விரும்புகிறதா? இல்லை இந்துக்கள் விரும்புகிறார்களா? கொண்டாட்டங்கள் என்பது அடுத்தவரின் அழிவில்தான் இருக்க வேண்டுமா?

விநாயகர் விழா மட்டுமின்றி நாட்டில் ஏராளமான விழாக்கள் மற்றவர்களுக்கு கேடு ஏற்படும் வகையில்தான் நடத்தப்படுகின்றன. சட்டம் இதை அனுமதிக்காவிட்டாலும் சட்டத்தின் காவலர்கள் அனுமதியோடு இவை அரங்கேற்றப்படுகின்றன.

தீபாவளி என்ற பெயரில் காற்றை விஷமாக்கும் வகையில் பட்டாசுகளைக் கொளுத்தி தனக்கும், மற்றவர்களுக்கும் கேடு விளைவிப்பது மத உரிமையா?

ஒவ்வொரு தீபாவளியின்போது நூற்றுக்கணக்கான வீடுகளைக் கொளுத்தி மனித உயிரைக் காவு கொடுப்பது மத உரிமையில் அடங்குமா?

போகிப் பண்டிகையின்போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று கூறி பழைய பொருள்களை எரித்து காற்றை மாசு படுத்துவது முறையா?

கோவில் விழாக்களின் போது ஜல்க்கட்டு நடத்தி மனித உயிர்களைப் கொடுப்பதும் வாயில்லா ஜீவனை வதைப்பதும் கூட மத உரிமையாகுமா?

மண்டையில் தேங்காய் உடைப்பது, தீ மிதிப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது என்று மதத்தின் பெயரால் நடக்கும் சட்ட விரோதமான செயல்களைத் தடுக்க வக்கற்றவர்களாக சட்டத்தின் காவலர்கள் உள்ளனர்.

வீதிகளை ஆக்ரமித்து கோவில்கள் கட்டுவதும், பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவதும் கூட மத உரிமையின் பெயரால் கண்டு கொள்ளப்படாமல் விடப்படுகிறது. நீதிமன்றங்கள் உத்தரவுகள் பல போட்ட பின்பும் நடைபாதைக் கோவில்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

மத உரிமை வழங்கப்பட்டுள்ள நாடு என்பதில் நாம் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமோ அதற்கு கொஞ்சமும் குறையாமல் மத உரிமையின் எல்லையைப் பேணுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மதத்தின் பெயரைச் சொல் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து செயல்களும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான மத உரிமை.

0 comments: