நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகளாகவும், சிந்தனையாளர்களாகவும் அப்பாவி மக்களால் பார்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் சராசரி மனிதனின் அறிவை விட குறைந்த அறிவு படைத்தவர்களாகத்தான் நமது அரசியல்வாதிகள் உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றில்... |
மக்கள் மத்தியில் ஒரு கருத்தை வைக்கும்போது மக்கள் ரசிக்கிறார்களா என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர, தான் கூறுவது அறிவுக்குப் பொருத்தமானதா என்பதைக் கவனிப்பதில்லை. அண்ணா அவர்கள் மறைந்தபோது நமது முதல்வர் ஒரு கவிதை பாடினார். அதில் அண்ணா என்பது மூன்று எழுத்தில் உள்ளதுபோல் தமிழ், அன்பு, அறிவு என மூன்று எழுத்தில் உள்ள வைகளைப் பட்டியல் போடுவார்.
அறிவுக்கும் அண்ணாவுக்கும் மூன்று எழுத்து என்பதில் ஏதாவது அறிவுப்பூர்வமான கருத்து இருக்கிறதா? மடமை, திமிர் போன்ற சொற்களுக்கும் கூட மூன்று எழுத்துக்கள்தான். எத்தனை எழுத்துடைய சொல் லாக இருந்தாலும் அதில் நல்ல அர்த்தம் உள்ளவை இருப்பதுபோல் கெட்ட அர்த்தம் தரக்கூடியவைகளும் இருக்கும் என்ற சாதாரண உண்மைக்கு மாற்றமாக அவர் பாடினார்.
நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் என்பதும் இதுபோல் அமைந்த உளறல்தான். உதடு ஒட்டுவதுதான் பிரச்சினையா? கலைஞர் என்றால் உதடு ஒட்டாது.
அம்மா என்றால் உதடு ஒட்டுமே அதற்கு என்ன சொல்வார்? நாம் என்றால் உதடு ஒட்டுவதால் ஒற்றுமையின் முக்கியத்துவம் தெரிகிறது என்பது ஒரு வாதமா? பிரிவு, பிளவு என்று சொன்னலும்தான் உதடு ஒட்டும்.
இவர்கள் கவிஞர்களைப்போல் (கவிஞர்களுக்கு சிந்தனை குறைவாகத்தான் இருக்கும்) உளறுகிறார்களே தவிர சிந்தனையார்களைப்போல் பேசுவதில்லை.
இதுபோல் அமைந்ததுதான் சமீபத்தில் இப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொன்ன கதையும்.
அந்தக் கதை இதுதான்
ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். "நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு...?'' என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம்.
உடனே இறைவன் சொன்னாராம் "நீ சொல்வது உண்மைதான். புல்லாங் குழலும், நீயும் காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் உன்னை எல்லாரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்...'' என்று கூறினார்.
இந்தக் கதையும் கலைஞரின் மேற்கண்ட தத்துவம்போல்தான் அமைந்துள்ளது.
ஓவ்வொரு பொருளும் அதற்கேற்ற வகையில் மனிதனுக்குப் பயன்படுகின்றன. ஜெயலலிதா கூறுவதுபோல் கால்பந்து பஞ்சராகி ஊதும் காற்றெல்லாம் வெளியே விட்டு விட்டால் அந்தக் கால் பந்தை எடுத்துக் கொஞ்சுவார்களா? உதைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது உதைப்பதற்காக பயன்படுகிறது. ஊதுவதற்காக படைக்கப்பட்டது ஊதுவதற்காக பயன்படுகிறது. அவ்வளவுதான்.
காற்றை வெளியே விடாமல் இருப்பதால்தான் கால் பந்து புல்லாங்குழலை விட அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
வாகனங்களில் உள்ள டயர்கள் ஜெயலலிதா கூறுவதுபோல் வாங்கும் காற்றை வெளியே விட்டுக் கொண்டிருந்தால் வாகனங்கள் இயங்குமா?
குழந்தைகளுக்கு பலூன் வாங்கிக் கொடுக்கும்போது காற்றை வெளியே அனுப்பும் ஓட்டை பலூனை யாராவது வாங்கிக் கொடுப்பார்களா?
காற்றை வெளியேற்றும் பொருள்கள் அதற்கேற்றவாறு நடப்பது எப்படி அதற்குப் பெருமையோ அதுபோல் காற்றைத் தனக்குள் வைத்துக் கொள்வதற்காக படைக்கப்பட்ட பொருள்களும் அவ்வாறே பயன்படுவதுதான் பெருமை.
மேற்கண்ட கதையில் தனது சிந்தனை வரட்சியை மட்டும் அவர் பறைசாற்றவில்லை. படைத்த இறைவனுக்கும் அறிவு இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். நமக்கே கிறுக்குத்தனமாகத் தெரியும் இதுபோன்ற பதிலைத்தான் இறைவன் சொல்வானா? இறைத் தன்மையில் சமரசம் செய்து கொள்ளாத மார்க்கம் இஸ்லாம். அந்த மார்க்கத்தின் பெயரால் நடத்தப்படும் இப்தார் நிகழ்ச்சியில் அவர் இந்தக் கதையைக் கூறி இருப்பதன் மூலம் அவர் இறைத் தன்மையைக் கேலி செய்து விட்டார்.
இறைவன் பெயரால் இட்டுக் கட்டிவிட்டார். இறைவனுக்கு அறிவு கிடையாது என்றும் சொல்லி விட்டார்.
இதில் கலந்து கொண்ட முஸ்லிம் தலைவர்கள் வாய் மூடி மவுனமாகத்தான் இருந்துள்ளனர். அப்படித்தான் இருக்க முடியும். இதற்காகத்தான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் பண்ண வேண்டாம் என்று கூறி வருகிறோம். இதுபோன்ற மேடைகளில் ஏறினால் மேடையிலேயே நம்மால் கண்டிக்க முடியாது என்று தெரிந்து கொண்டே அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தலை காட்டுபவர்கள் சிந்திக்க வேண்டும்.
புனித மிக்க ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் பெயரில் இடுக்கட்டப் பட்ட பொய்யைக் கூறும் சபையில் இருந்ததற்காக அவர்கள் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்.
நன்றி : உணர்வு வார இதழ்
0 comments:
Post a Comment