Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 28 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து கிண்டலடித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து திராவிடக் கழகத்தின் உண்மை எனும் பொய் ஏடு முஸ்லிம்களையும் உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்திருந்தது.

எனவே பகுத்தறிவு வேடம் போட்டுத்திரியும் இவர்கள்தான் உண்மையில் மூட நம்பிக்கையாளர்கள் என்பதைத் தக்க காரணங்களுடன் கடந்த ஐந்து வாரங்களாக நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

ஒரு மனிதன் பகுத்தறிவாளன் என முடிவு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு இயக்கம் பகுத்தறிவுடன் இயங்குகிறது என முடிவு செய்வதாக இருந்தால் அதற்குச் சில அடிப்படைத் தகுதிகள் இருந்தாக வேண்டும்.

அதில் மிக முக்கியமான தகுதி, தனக்குத் தானே முரண்படாமல் இருப்பதாகும். தான் பிரச்சாரம் செய்து வரும் கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருவன்தானே மறுத்தால் அவனிடம் பகுத்தறிவும், தெளிவான சிந்தனையும் இல்லை என்று எளிதாக முடிவு செய்துவிடலாம்.

போலி பகுத்தறிவுவாதிகளின் பிரச்சாரத்தையும், அவர்களின் நடவடிக்கைகளையும் நாம் கவனித்தால் மத நம்பிக்கையுடைவர்களைவிட அதிக முரண்பாடு உடையவர்களாக அவர்கள் இருப்பதைக் காணலாம்.

திருமணமும் பகுத்தறிவும்

திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஆணும் - பெண்ணும் இணைந்து ஒரு குடும்பமாக உருவாகிறார்கள். திருமணம் செய்வது பகுத்தறிவுக்கு ஏற்றதா இல்லையா என்று பகுத்தறிவுவாதிகள் பயங்கர ஆராய்ச்சியில் இறங்கி திருமணம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இதுபற்றி பகுத்தறிவாளர்களின் தலைவர் பெரியார் அவர்கள் ஆணித்தரமாகக் கூறுவதைக் கேளுங்கள்!

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களின் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்திற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்கு பயன்படும்படியான பேர்பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் 'லியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பனர்தான். சாஸ்திரங் களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!
- (விடுதலை 28-06-1973)

இந்த மாதிரி வாழ்க்கைத்துணை ஒப்பந்த முறையைக் கூடக் கிரிமினல் ஆக்க வேண்டுமென்று இப்போது (89ஆம் வயதில்) நான் எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறேன். கலியாணமென்று சொன்னாலே அது கிரிமினல் சட்டப்படித் தவறாக வேண்டும். அந்தக் கொடுமையினாலே மனித வளர்ச்சி தடைபட்டுக் கிடக்கிறது.
- (விடுதலை 16-11-1967)

''எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்ளுவதைத் தவறு, சட்டப்படிக் குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ அதேபோல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதைச் சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும்''
- (விடுதலை 02-05-1973)

''இந்தக் கலியாண முறைகள் இருப்பதால்தானே குழந்தை குட்டிகள், அவற்றுக்குச் சொத்துக்கள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. மந்திரி ஆகிறவன்கூட கலெக்டர் ஆகிறவன் கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றத்தானே இருக்கிறான். இந்த வகையில் அமைப்பு முறை என்றால் உலகத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ எவன் கவலைப்படுகிறான்? பொது உணர்ச்சி எப்படி ஏற்படும்? அவனவன் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கே ஈடுகொடுத்துக் கொண்டு இருப்பதென்றால் சமுதாய உணர்ச்சி எப்படி ஏற்பட முடியும்''
- (விடுதலை 27-06-1973)

பெரியார் கூறும் கருத்துக்களின் தொகுப்புகளில் மேலும் சிலவற்றை வரும் வாரங்களில் பார்க்கலாம். பின்னர் இக்கருத்துக்களில் அவர் எப்படியெல்லாம் முரண்படுகிறார் என்பதையும் விரிவாக அலசலாம்.
இன்ஷா அல்லாஹ்...

1 comments:

Anonymous said...

பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளன. போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது இஸ்லாமியப் பார்வை. கடவுள் இல்லாமல் இந்தப் பிரபஞ்சமே உருவாகி இருக்காது என்பதை அவர்கள் (போலிப் பகுத்தறிவவுதிகள்) புரிந்து கொள்ள வேண்டும்.