Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Saturday, 23 October 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 5

தமிழில் அர்ச்சனை

கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக் கொள்ளும் போலிப் பகுத்தறிவுவாதிகள் இன்னொருபுறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.

கடவுள் இல்லை என்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை - எந்த மொழியில் இருந்தாலும் - அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். நேர்மையான - சமரசம் செய்து கொள்ளாத - பகுத்தறிவு இப்படித்தான் தீர்ப்பளிக்கும்.


தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறுவதும் அதை வர வேற்பதும் எந்த வகையில் பகுத்தறிவு சார்ந்ததாகும்?

இதற்கு போலிப் பகுத்தறிவுவாதிகள் கூறுகின்ற காரணங்கள் யாவும் பகுத்தறிவுக்கு வெளியே நின்று கொண்டு கூறு கின்ற காரணங்களாகவே உள்ளன.

பகுத்தறிவுக்கு இது ஒவ்வாத செயல்தான்! பார்ப்பனரைப் பழி தீர்க்க இது அவசியம் என்று கூறுவார்களானால் இந்த வகையில் இவர்களும் மதவாதிகளைப் போல்தானே நடக்கின்றனர்?

இன உணர்வு, பழிவாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது அனைத்து மூட நம்பிக்கைகளையும் மிஞ்சிய மூட நம்பிக்கையல்லவா?

இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது பகுத்தறிவுக்கு அல்லது அறிவியலுக்கு உட்பட்டதுதான் என்பதை நிரூபிக்க போலிப் பகுத்தறிவுவாதி கள் தயாரா என்று அறைகூவல் விடுக்கிறோம்.

கடவுளின் பெயரால் பண விரயம்

இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்வதுடன் கடவுளுக்காக அபிஷேகம் என்ற பெயரில் பொருட்களைப் பாழாக்கலாமா என்று மேடை போட்டு போலிப் பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சாரத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்ததால் இதை முஸ்லிம்களாகிய நாமும் வரவேற்போம். ஆனால் எதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்று இவர்கள் சித்தரித்தார் களோ அதுபோன்ற காரியங்களை இவர்களே செய்தும் வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் நடத்தும் விடுதலை 05-08-2008 நாளேட்டில் படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

"புதுச்சேரியில் பஞ்ச முக ஆஞ்சனேயருக்கு 1001 லிட்டர் பாலை அபிஷேகம் செய்து பாலை வீணாக்கியுள்ளனர். எத்தனையோ குழந்தைகள் சத்துணவுக் குறைவாலும் பசியாலும் அவதியுறும் போது இப்படி பாலை வீணாக்கலாமா' என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். நல்ல கேள்விகள்தான். ஆனால் அதற்கு மறுநாள் வெளியான விடுதலை நாளேட்டில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

சைதை பகுதியில் பெரியார் சிலை நிறுவ தி.க.வினர் முடிவு செய்துள்ளார்களாம். அதற்கு முதல் கட்டமாக, எம்.பி. பாலு என்பவர் பத்தாயிரம் ரூபாய் அவரது குடும்பத்தினர் பதினைந்தாயிரம் ரூபாய், மதியழகன் பத்தாயிரம், அவரது குடும்பத்தார் ஐயாயிரம், தென்றல் பத்தாயிரம், அவரது குடும்பத்தினர் ஐயாயிரம், பத்ம நாபன் ஐயாயிரம், இரவி ஆயிரம் பிரபாகரன் ஆயிரம் என நிதி வழங்கினார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதெல்லாம் ஆரம்ப கட்டமாகத் திரட்டப்பட்ட நிதியாம்.


புதுச்சேரியில் 1001 லிட்டர் பால் அபிஷேகம் செய்தார்கள் என்றால் 50 லிட்டர் பாலுடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்துதான் அபிஷேகம் செய்திருப்பார்கள். கறந்த பாலை அப்படியே அபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள்.

ஒரு லிட்டர் பால் பதினெட்டு ரூபாய் என்ற கணக்கின்படி 500 லிட்டர் பால் ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். தண்ணீர் இல்லாத பால் என்றால்கூட 1000 லிட்டருக்கு பதினெட்டாயிரம் ரூபாய்தான் ஆகும்.

இந்த பதினெட்டாயிரம் ரூபாயை நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் ஐந்தும் பத்துமாகத் திரட்டியிருப்பார்கள். ஒவ்வொரு பக்தனும் நூறு இருநூறு ரூபாய் பணத்தை வீணாக்கியிருப்பான்.

ஆனால் மூட நம்பிக்கையின் முதல் அடையாளமான ஒரு கற்சிலையை நிறுவ ஒரு குடும்பமே 25 ஆயிரம் (பதினைந்தாயிரம், பத்தாயிரம்) என்று கொடுக்கும் அளவுக்கு பயங்கர சிந்தனையாளர்களாக இருக்கிறார்களே? இந்தப் பகுத்தறிவைக் கண்டு புல்லரிக்கிறது போங்கள்!

பாலுக்காக செலவிட்ட பணத்தை மட்டும்தான் ஏழைக் குழந்தைகளின் உணவுக்கு செலவிட முடியுமா? கல்லுக்காக செலவிட்ட பல்லாயிரம் ரூபாய்களைக் கொண்டு வறுமையை விரட்டியிருக்கலாமே! ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கலாமே!

அதுகூட மதவாதிகளுக்குத்தான் சாத்தியமாகும். அக்மார்க் பகுத்தறிவுவாதிகள் ஏழைக் குழந்தைகளுக்கு தான தர்மம் செய்யக் கூடாது என்றுதான் இவர்களின் ஆசான் பெரியார் இவர்களுக்குப் போதித் துள்ளார்.

ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும் பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன் - குடியரசு 21-04-1945 இதழில் பெரியார்.

கல்லுக்கு அபிஷேகம் செய்தால் அதுவும் மூட நம்பிக்கையாகி விடுகிறது. அந்தப் பாலை ஏழைகளுக்குத் தர்மம் செய்தால் அதுவும் உங்கள் தந்தையின் பார்வையில் அயோக்கியத்தனமாக ஆகிவிடுகின்றது. இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?

இவர்களால் விமர்சிக்கப்படும் மதவாதிகளாவது கற்சிலைகளுக்கு பாலை அபிஷேகம் செய்வதற்கு ஒருபுறம் பணத்தை வீணாக்கினாலும் ஏழைக் குழந்தைகளுக்காகவும் தங்கள் நிதியாதாரத்தை செலவிட்டு வருகின்றனர்.

ஆனால் அக்மார்க் பகுத்தறிவாளர்கள் சிலைக்கு மட்டும்தான் செலவு செய்வார்கள். ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்து அயோக்கியர்களாக மாட்டார்கள்.

மக்களுக்கு உதவாத இந்தப் பகுத்தறிவைவிட மக்களுக்கு கருணை காட்டும் அந்த மதவாதிகள் ஆயிரம் மடங்கு சிறந்து விளங்குகிறார்கள்.

பெரியார் பிறந்த (நாளாக இவர்கள் கூறும்) நாட்களின்போதும் இறந்த நாளின் போதும் அவரது சிலைக்காக ராட்சத மலர் மாலைகள் நூற்றுக்கணக்கில் போடப்படுகிறதே! இதற்கு ஆகும் செலவு பாலாபி ஷேகத்திற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ளதே!

பொருளாதாரத்தை நாசமாக்கலாமா என்று நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளையும் அதைவிட வலிமையாக இந்து மதவாதிகள் உங்களை நோக்கி கேட்க முடியுமே?

மற்றவர்களை நோக்கி நீங்கள் எழுப்பும் கேள்விகள் மட்டும் அறிவுப்பூர்வமாக இருந்தால் போதுமா? அவர்கள் உங்களை நோக்கி அதே கேள்விகளைக் கேட்கும் நிலைமையில் நீங்கள் இருக்கக் கூடாது என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை?

போலிப் பகுத்தறிவுவாதிகளான உங்களைப் பொருத்தவரை மற்ற எவரையும் விமர்சனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து, முதலில் உங்கள் நடவடிக்கைகளைச் சரி செய்யும் வழியைப் பாருங்கள்!

தொடரும்...

0 comments: