Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Sunday, 24 October 2010

மரணங்களைத் தடுக்க இருக்கையை மாற்ற வேண்டும்

காலையில் நாம் வேலைக்கு அறக்கப் பறக்க கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு வருவோம். இந்த முறையாவது பஸ்ஸில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் என்று வீராவேசமாக நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பார்த்தால்தான் தெரியும். 


கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். சரி கொஞ்ச நேரம்தானே ஆகப் போகுது அடுத்து பஸ்ஸில் போகலாம் என்று நினைத்துக் கொண்டு அடுத்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்தால் முனனர் சென்ற பஸ்ஸிலேயே ஏறியிருக்கலாம் இதில் அதை விட கூட்டம் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அதிலும் கூட்டம் நிரம்பி வழியும். 

பெண்களின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. படிக்கட்டில் தொங்கும் திருந்தாத ஜென்மங்கள்
எப்படியோ பஸ்ஸைப் பிடித்து உள்ளே போகலாம் என்று நினைத்தால் படிக்கட்டில் தெங்குபவனைத் தாண்டி உள்ளோ போவது மிகவும் சிரமம். இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு வராதா என்று மக்கள் அனைவரும் எப்போதும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். 

என்ன செய்வது சென்னையில் ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கிராமத்தினர் மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்துவர்கள் சம்பளம் அதிகமாக இருப்பதால் கிராமத்திற்கு போவதற்கு எண்ணமே இல்லாமல் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதை நான் குறை கூறவில்லை. நமது நாட்டில் எங்கே வேண்டுமானாலும் தங்க நம் மக்களுக்கு உரிமை உள்ளது. பிறகு ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் அப்படி வந்துபோவர்களுக்கு வசதியாக நமது சென்னை மாநகரப் பேருந்துகள் இல்லை. 

ஒரு பேருந்தில் 54 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று பஸ்ஸிலேயே எழுதி வைத்திருக்கும். ஆனால் அதை விட இரண்டு மடங்காக அந்த பஸ்ஸில் பயணம் செய்வார்கள். இப்படி இருந்தால் எப்படி விபத்து நடக்காமல் இருக்கும். 

சரி விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் சென்னை மாநகராட்சி ஒரு முடிவு எடுத்துள்ளது. என்னவென்றால் பஸ்ஸின் பெண்களின் இருக்கையை மாற்றுவது என்று. 

பஸ்ஸில் பயணம் செய்பவர்களில் பலர் படிக்கட்டுப் பயணத்தையே செய்கின்றனர். இதனால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. இந்த படிக்கட்டு பயணம் எதற்கென்றால் படிக்கட்டின் ஓரமாகத்தான் பெண்களின் இருக்கைகள் இருக்கின்றன. சீன் காட்டுகிறேன் பேர்வழி என்று சில இளைஞர்கள் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து ஒரு கையில் பஸ்ஸின் ஏதேனும் ஒரு கம்பியைப் பிடித்து ஒரு கையில் தலையைச் சீவியவாறு சீன் காட்டுவார்கள். 

மேலும் சிலர் ஒரு படி மேலே போய் கால் வைப்பதற்குக் கூட இடம் இருக்காது அந்த இடத்தில் செருப்புக் கால் கொண்டு நுனி விரலில் படிக்கெட்டில் வைத்து பயணம் செய்வார்கள். 

இவர்களை நம்பி இருக்கும் குடும்பம் இதைப் பார்த்தால் பதைபதைத்து விடும். அந்த அளவிற்கு ஆபத்தான பயணத்தை இந்த இளைஞர்கள் மேற்கொள்கின்றனர். 

இதற்கொல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பெண்களின் இருக்கையை வலது புறத்தில் மாற்ற சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. முன்னர் இதுபோல் மாற்றி பெண்கள் ஏற, இறங்க சிரமமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து பின்னர் இடப்புறமாக மாற்றினர். இப்போது மறுபடியும் வலப்புறம் மாற்றியுள்ளனர். 

இது மாறாமல் அப்படியே இருந்தால் நல்லது என்று மக்களின் பலர் கருதுகின்றனர். 

இது சம்பந்தமாக ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியிருக்கிறது. என்னவென்றால் ஆண் மயில் தோகை விரித்து ஆடுவதும், பெண் குயில் பாட்டுப் பாடி அசத்துவம், ஆண் சிங்கம் கூட்டத்தைக் காக்க சண்டை போடுவதும் எதிர் பாலினத்தை ஈக்கத்தான். அதனால் பெண்களை ஈர்க்கத்தான் ஆண்கள் இவ்வாறு செய்கின்றனர். இதெல்லாம் ஒரு மேட்டரா செஞ்சா செஞ்சிக்கிட்டு போகட்டும், செத்தா செத்து விட்டு போகட்டும் என்று எழுதியிக்கிறது.

இவர்களுடைய வீட்டில் உள்ள பெண்களை பஸ்ஸில் செல்லும்போது படிக்கட்டில் தொங்கும் ஆண்கள் இவ்வாறு செய்தால் பொறுத்துக் கொள்வார்களா? இப்படியெல்லாமா விளக்கம் கொடுப்பார்கள்.

இதற்கெல்லாம் தீர்வாக சென்னை மாநகரப் பேருந்துக் கழகம் தானியங்கி கதவு கொண்ட பேருந்துகளைத்தான் இயக்க வேண்டும்.

இந்த தானியங்கி கதவு கொண்ட பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். டிரைவர் ஸ்விட்சைப் போட்டால்தான் கதவு திறக்கும். இல்லையென்றால் கண்ட இடத்தில் ஏறுவதும், இறங்குவதும் முடியவே முடியாது. முதலில் இதுபோன்ற பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.

குறிப்பாக குப்பைபோல் உள்ள பஸ்களை பழைய ஈயம்பித்தளை பேரிச்சம்பழத்திற்குப் போட்டு விட்டு புதிய பஸ்களை குறைந்த கட்டணத்தில் இயக்க வேண்டும்.

பஸ்ஸுல மட்டுமில்லீங்க டிரைன்ல கூட கூட்டம் தாங்க முடியல என்று புலம்புவோரின் சத்தம் காதில் ஒலிக்கிறது.

இன்னும் போகப் போகப் பார்த்தால் நம்ம ஆளுங்க பிளைட்டுல கூட புட்போர்ட் அடிப்பாங்க…

0 comments: