Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 4 November, 2010

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 2
நாத்திகப் பகுத்தறிவின் பொய் முகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட மிஹ்ராஜ் பயணம் தொடர்பாக நாத்திகப் பத்திரிகையில் வந்த விமர்சனத்திற்குரியபதிலை இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம். முந்தைய தொடரில் விமர்சகரின் நபி மொழிக் கலையிலுள்ள புலமை மற்றும் அவர் பெற்றுள்ள ஆய்வுத்திறன் எந்த இலட்சணத்தில் இருந்தது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டைக் கண்டோம். மிஹ்ராஜ் பயணத்தைப் பற்றிய அறிவியல் நிலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.


நாத்திகப் பகுத்தறிவும் அறிவியல் பாசாங்கும்

மூட நம்பிக்கையை அடையாளம் காண்பதற்கு அறிவியலின் தேவையை நாத்திகர்களைவிட திருக்குர்ஆனின் நம் பிக்கையாளர்கள் நன்றாகவே உணர்ந்துள் ளார்கள். ஆயினும் இரு சமூகத்தாருக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு. முன்னவர்கள், அறிவியல் என்பதே பகுத்தறிவாகும், அறிவியலுக்கு அப்பால் எந்தப் பகுத்தறிவும் இல்லை எனப் பாசாங்கு செய்யும்போது பின்னவர்கள் அறிவியலை பகுத்தறிவின் ஒரு கிளையாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். இந்த வேறுபாடு இரு சமூகத்தாரின் சொல்லிலும், செயலிலும் பிரதிபலிப்பது இயற்கை ஆகும்.

நாத்திகர்களின் அறிவியலே பகுத்தறிவு எனும் நிலைகூட வெறும் பாசாங்கு என்று கூறினோம். ஏனெனில் அதில்கூட அவர்கள் நேர்மையைக் கடைபிடிப்பதில்லை.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் ஏராளமான செய்திகளைக் கேள்விப்படுகிறோம். சான்றாக, செய்தி ஊடகங்களான செய்தித்தாள், வானொலி, டி.வி. வழியாக ஆயிரக்கணக்கான செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். அவைகளில் சிலவற்றை நாம் நம்புகிறோம். வேறு சிலவற்றை நாம் பொய் என்று கூறித் தள்ளி விடுகிறோம், மற்றும் சில செய்திகளை ஐயுறுகிறோம். 

ஆனால் இவற்றுள் எதன் மீதாவது அறிவியல் ஆய்வுகள் நடத்திய பிறகா இந்த முடிவுகளை நாம் மேற் கொள்கிறோம்? இல்லவே இல்லை! இந்த இடங்களில் நாம் பகுத்தறிவின் இதர அம்சங்களைப் பயன்படுத்தி, சொல்லப்பட்ட செய்தி மெய்யா, பொய்யா என்று தீர்மானிக்கின்றோம். இந்த விஷயத்தில் நமது நாத்திக நண்பர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்?

நம் ஒவ்வொருவருக்கும் நாத்திகக் கொள்கை உடைய சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு அறிவியல் ஆதாரம் எதையும் என்னால் தர முடியாது என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். இல்லையென்றால் இதற்கும் அறிவியல் ஆதாரம் கேட்டு இன்னொரு கட்டுரை எழுத வேண்டிய சிரமம் விமர்சகருக்கு வந்து விடக்கூடும். அவர்களும் இந்த விஷயத்தில் நம்மைப் போன்றே நடந்து கொள்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

நாத்திக உலகின் அன்றாடப் போக்கு இவ்வாறு இருக்கையில் அறிவியலுக்கு அப்பால் பகுத்தறிவே இல்லை என்பதுபோல் ஒரு சில விஷயங்களில் மட்டும் அவர்கள் நடந்து கொள்வது ஏன்? இதைத்தான் பாசாங்கு என்று நாம் குறிப்பிட்டோம்.

அறிவியல் ஆவேசத்தின் ஆணிவேர்

நாத்திக உலகின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்தால் அறிவியலுக்கு அப் பால் பகுத்தறிவே இல்லை எனும் அளவிற்கு எந்த இடத்தில் அளவு கடந்த ஆவேசம் காட்டுகிறார்கள் என்பது தெரிய வரும். அது ஒரே ஒரு இடத்தில் மட்டு மேயாகும்.

ஆம்! எந்தச் செய்தியை ஒப்புக் கொண்டால் அது கடவுட் கொள்கைக்கு ஆதரவாக அமைந்து விடுமோ அந்த இடத்தில் மட்டுமே ஆவேசம் காட்டுகி றார்கள். இதன் காரணமாகவே நமது பவ்தீக உலகின் வாகனங்களாகிய இரயில், விமானம், ராக்கெட் போன்றவை பவ்தீக எரிபொருளைக் கொண்டு இயக்கப்படுவது போன்று அபவ்தீக வாகனமாகிய 'புராக்', எந்த எரிபொருளைக் கொண்டு இயக்கப்பட்டது எனக்கேட்டு பகுத்த றிவை அடகு வைத்து அறிவியல் மேடையில் கோமாளி வேடம் பூண்டு ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் நாத்திக அன்பர்கள்.

மந்த புத்திகள்

நபிமொழியில் போதிய தேர்ச்சி இல்லா ததாலேயே விமர்சகரால் 'புராக்' ஒரு அபவ்தீக வாகனம் எனப்புரிந்து கொள்ள இயலாமல் போயிற்று. இருப்பினும் இந்த அளவிற்கேனும் நபிமொழியில் கவனம் செலுத்தினாரே என மகிழ்ந்து இவரது தவறைப் புறக்கணித்து விடலாம். ஆயி னும் உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களின் ஆன்மீக நம்பிக்கையை விமர்சித்து கட்டுரை எழுதுபவர் மிகக் குறைந்தபட்சம் பகுத்தறிவின் ஒரு

சாதாரண அம்சத்தையாவது பெற்றவராக இருக்க வேண்டாமா? ஆனால் பகுத்தறிவிலும் பாடசாலையிலும் ஒரு மந்த புத்தி மாணவனின் நிலையிலுள்ளவராகவே அவரது கட்டுரை அவரை அடையாளம் காட்டுகிறது.

சான்றாக 'புராக்' ஒரு மிருகம் என நபிமொழி கூறுவதாக ஒரு பாராவில் எழுதிய விமர்சகர், மற்றொரு பாராவில் எரிபொருள், விமானம் இவை கண்டு பிடிக்காத காலத்தில் 'புராக்' எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது என வினவுகிறார்! விமானத்திற்கு எரிபொருள் தேவை. ஆனால் மிருகத்திற்கு ஏதய்யா எரிபொருள்?

பகுத்தறிவாளர் என்று மார்தட்டி இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக்கையை (பவ்தீக நம்பிக்கை அன்று) ஆய்வு செய்து குற்றம் சாட்டவரும் உமக்கு அந்தப் பகுத்தறிவு பூரணமாக இல்லை என்றாலும் அதிலிருந்து ஒரு சாதாரண அறிவாவது உமக்கு இருக்க வேண்டாமா?

விமர்சகரின் அறிவியல் தேர்ச்சி

இரயில் வண்டி, ராக்கெட் போன்றவை நமது பவ்தீக உலகின் எரிபொருளைக் கொண்டு ஓடுவதைப்போல் 'புராக்' எனும் வாகனத்தை பவ்தீக உலகைச் சார்ந்த எவ்விதப் பொருட்களின் ஆற்றலும் தேவையில்லாத - நமது பவ்தீக உலகிற்கு அப்பாற்பட்ட அபவ்தீக உலகைச் சார்ந்த வாகனமாகவே நபிமொழி குறிப்பிட்டுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் அறிவியல் ஆதாரம் ஒன்றையும் விமர்சகர் வெளியிட்டுள்ள நபிமொழியில் காண முடிகிறது. ஆயினும் நபிமொ ழியி­ருந்து அதை விளங்கிக் கொள்வதற்கு அதன் மீது ஆய்வு நடத்தும் நப ருக்கு சிறிதளவு அறிவியல் அறிவேனும் இருக்க வேண்டும். விமர்சகர் வெளியிட்டிருக்கும் அந்த நபிமொழி வருமாறு;
தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கிறது. (நூல் ; முஸ்லிம் - 234)

மேற்கண்ட நபி மொழியிலிருந்து 'புராக்' ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 3,00,000 கி.மீ வினாடி) நடக்கும் ஆற்றலைப் பெற்றதாகும் என்பது வெளிப்படை. ஏனெனில் பார்த்தல் எனும் செயல் ஒளியின் வேகத்தில் நடைபெறுவதாக அறிவியல் கூறுகிறது. இப்போது அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் அவர்களின் உலகப் புகழ் பெற்ற சார்பியல் தத்துவத்தின் விதி என்னவெனில் எப்பொருளாலும் எக்காரணத்தைக் கொண்டும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது என்பதுதான்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன் அவர்கள் நமது பவ்தீக உலகைச் சார்ந்த விஞ்ஞானியே என்பதும் அவர் கூறும் அறிவியல் பவ்தீக உலகைச் சார்ந்தது என்பதும் விளக்கத் தேவை யில்லை. எனவே மேற்கண்ட அறிவியல் உண்மைகளிலிருந்து நமது பவ்தீக உலகின் எப்பொருளாலும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது என்பதால் ஒளியின் வேகத்தில் நடக்கும் ஆற்றல் பெற்ற புராக் பவ்தீக உலகைச் சார்ந்த வாகனம் இல்லை என்பதும் அது ஒரு அபவ்தீக உலகின் வாகனமே என்பதும் சிறிதளவு அறிவியல் அறிவு இருந்தாலே சட்டென விளங்க முடியும். ஆயினும் நபி மொழிகளை பகுத்தாய்ந்து இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக்கையை (உலகியல் விஷயங்களையன்று) அறிவியல் ஆய்வு செய்யக் கிளம்பிய இந்த விமர்சகருக்கு இதெல்லாம் தெரியவே இல்லை.

நபிமொழி கலையில் தேர்ச்சியில்லாததால் மட்டும் இவருக்கு புராக் ஒரு அபவ்தீக வாகனம் என்று தெரியாமல் போகவில்லை. அதை விளங் கிக் கொள்ளும் அளவிற்கு அறிவியல் தேர்ச்சியும் இவருக்கு இல்லை என்பதையே அவரது விமர்சனத்தி­ருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த இலட்சணத்தில் இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக்கையை அறிவியல் ஆய்வு செய்யப் புறப்படுகின்றனர் சில பெரியார் தொண்டர்கள்! வெட்கக்கேடு!
பதிலடி தொடரும் இன்ஷா அல்லாஹ்.
ஏ.கே. அப்துர் ரஹ்மான்

0 comments: