பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு ஒன்றில் திருமணம் பற்றிக் கூறப்படும் மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்
திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை
அடிமைப் படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழிய, பொது நலத்துக்கு அல்லவே புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்ந்து காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.
அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக் கட்டும் என்பதற்காகவேயாகும். ஆண்க ளும், பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு பிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் - பெண்டாட்டியாகி தனிக்குடித் தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக் கொண்டு, பொதுநல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகின்றார்கள்.
உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லையில் லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால் திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். நான் சொன்னது நடக்காமல் இருக்கவில்லையே! எனவே திருமணத்துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக் கையுடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத் துவது மிகவும் அக்கிரமமாகும்.
பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே வாழ்க்கைத் துணையைப் பற்றி நினைக்க வேண்டும். அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக் கிடக் கூடாது!
திருமணம் என்பது மனிதத் தன்மைக் காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது. உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள், எப்படிப் பெண் ஆள வேண்டும் என்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே அல்லாமல் அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது...
எனவே பெண்ணடிமை ஒழிய, திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்
(தந்தை பெரியார், உயர் எண்ணங்கள்,
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு)
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு)
திருமணங்களில் சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளன என்பதற்காக பெரியார் திருமணத்தை எதிர்க்கவில்லை. திருமணத்தினால் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதால்தான் திருமணமே கூடாது என்றார். சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதை (?) திருமணங்களையும் கூட பெரியார் கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று கூறியுள்ளதையும் மேலே காணலாம்.
பகுத்தறிவு ஆராய்ச்சிப்படி திருமணம் என்ற முறையே தவறு என்றால் ஆடு மாடுகளைப்போல தேவைக்கேற்ப சுகம் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பது பகுத்தறிவுத் தந்தையின் கண்டு பிடிப்பு.
பெரியாரும் நாகம்மை என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணம் பற்றி கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இந்தத் திருமணம் இதுபோன்ற பிரச்சாரத்தை பெரியார் செய்வதற்கு முன்னர் நடந்த திருமணமாகும்.
ஆனால் நாகம்மையார் மரணித்த பிறகு பெரியார் மணியம்மை என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தாரே! அந்தத் திருமணம் செய்த போது திருமணமே கூடாது என்ற பிரச்சாரத்தை செய்து வந்தார்.
பெரியார் திருமணம் செய்து கொண்ட தன் மூலம் தனக்குத் தானே முரண்பட்டார். அது மட்டுமின்றி பெரியார் இவ்வாறு கூறியது மடத்தனமா னது. அறவே சிந்த னையற்றவனின் கூற்று எனச் சொல்லாமல் பெண் ணுரிமைக்காக பெரியார் பாடுபட்டதாகக் கூறும் போதெல்லாம் மேற்கண்ட பெரியாரின் தத்துவங்களை போலி பகுத்தறிவுவாதிகள் மேற்கோளாக எடுத் துக் காட்டுகின்றனர்.
பெரியாரின் இந்தக் கருத்துக்களில்தான் பெண்ணுரிமை அடங்கியுள்ளது என்று கருதக் கூடிய போலி பகுத்தறிவுவாதிகள், தாங்கள் திருமணம் செய்து கொண்டது ஏன்? வீரமணியிருந்து கலைஞர்வரை அனைத்து பெரியாரின் சீடர்களும் திருமணம் செய்து கொண்டது ஏன்?
திருமணமே கூடாது என்று பிரச்சாரம் செய்த கால கட்டத்தில் பலருக்கு பெரியார் திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
தனக்குத்தானே முரண்படுபவர் யாராக இருந்தாலும் அவர் ஒருக்காலும் பகுத்தறி வாளராக இருக்க முடியாது. ஒருவர் தனக்குத்தானே முரண் பட்டதை வைத்து ஒருவரது பகுத்தறிவை எடை போடாமல் அந்த முரண் பாட்டைத் தூக்கிப் பிடிப்பதும் பகுத்தறிவாளர்களின் செயலாக இருக்க முடியாது.
போலி பகுத்தறிவுவாதிகள் இதற்கு சொல்லக் கூடிய எந்த விளக்கமும் எந்த வாதமும் பகுத்தறிவுக்கு வெளியே நின்று செய்யும் வாதமாகவே இருக்கிறது.
எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது அறிவுப்பூர்வமானதாகவும் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் இருந்தால் அதை மிகச் சிலராவது கடை பிடிப்பார்கள். குறைந்தபட்சம் அக்கொள்கையை முன்னெடுத்துச் செல்பவர்க ளாவது அதைக் கடைப்பிடித்துக் காட்டுவார்கள்.
ஆனால் திருமணமே செய்யக் கூடாது என்ற பெரியாரின் கருத்தை ஒரே ஒருவர் கூட பெரியார் சொன்ன தத்துவத்துக்காக கடைபிடிக்கவில்லை. ஆண்மை இல்லை என்பதற்காக சிலர் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம். இது பெரியாருக்கு முன்பே இருந்த நிலைதான்.
வேசித் தொழில் செய்பவர்கள் திருமணம் செய்யாமல் இருந்திருக்கி றார்கள். இதுவும் பெரியாரின் தத்துவத்தின் காரணமாக அல்ல. பெரியாருக்கு முன்பே அத்தகையோர் இப்படித்தான் இருந்தனர்.
வேறு பல பொறுப்புகளைச் சுமப்பதற்கு முதடம் கொடுத்த பலரும் திருமணம் செய்யாமல் உள்ளனர். இதுவும் ஆரம்ப காலம் முதல் உள்ள நிலைமைதான்.
ஒரு மனிதன் கூறும் தத்துவம், அதுவும் தீவிரமாக தொடர்ந்து வலியுறுத்திப் பேசும் தத்துவம் அவராலும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவரது வலது இடது கரங்களாக உள்ளவர்களாலும் கடை பிடிக்கப்பட வில்லை. அவரை மதிக்கும் ஒரே ஒருவராலும் கடைப்பிடிக்க முடிய வில்லை என்றால் இது வடிகட்டிய மடமை என்றுதானே கூற வேண்டும்?
பார்ப்பனர்கள் தவறான அறிவுக்குப் பொருந்தாத கருத்தைச் சொன்னார்கள் என்பதற்காக அவர்கள் மீது பாய்ந்து பிராண்டும் போலி பகுத்தறிவுவாதிகள் அதே வேகத்துடன் இந்தக் கருத்துக்கு எதிராக பாய்ந்ததுண்டா? இந்தக் கருத்தைச் சொன்னவர் மீது பாய்ந்ததுண்டா?
இந்தப் போக்கில் சிந்தனைத் தெளிவோ நடுநிலை நோக்கோ உள்ளதா என்று போலி பகுத்தறிவுவாதிகளை நாம் கேட்கிறோம்.
மிகச் சில பேர் இதுபற்றி விமர்சித்துள்ளனர்.சொல்லுக்கும் செயலுக்கு மிடையே இடைவெளி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று மென்மையான முறையில் தடவிக் கொடுத்து விமர்சித்துள்ளனர்.
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு என்பது சில விஷயங்களில் அனைவரிடமும் இருக்கும். ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் உயிர்நாடியாகக் கருதும் கொள்கைகளில் இருக்கக் கூடாது. இது மோசடி, பித்தலாட்டம், மடமை போன்ற சொற்களால் விமர்சிக்கப்பட வேண்டுமே தவிர ஒருவர் மீது ஏற்பட்டுவிட்ட அன்பின் காரணமாக மயிலிறகால் வருடுவது நாணயமான விமர்சனம் ஆகாது.
பெரியாரின் கருத்துக்காக எங்களை எப்படி விமர்சிக்கலாம் என்று நழுவுவதும் நாணயமான நடவடிக்கையாக இருக்க முடியாது.
பெரியாரை போலி பகுத்தறிவுவாதிகள் நேசியதைவிட கோடி மடங்கு நபிகள் நாயகத்தை முஸ்ம்கள் நேசிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது உணர் வில் எழுதிய ஒரு தகவலை மறுக்கிறேன் என்ற பெயரில் நபிகள் நாயகத்தை யும் நபிகள் நாயகம் தொடர்புடைய மிஹ்ராஜ் பயணத்தையும் கேலி செய்வதில் உள்ள நியாயத்தைவிட பெரியாரின் தவறான கருத்துக்களை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் குறைந்ததல்ல.
கிருஷ்ணரோ, இராமரோ செய்ததாகச் சொல்லப்பட்டவைகளுக்காக இன்றைய இந்துக்களை இவர்கள் விமர்சிப்பதில் உள்ளதை விட பெரியார் சொன்னதற்காக அவரது பிள்ளைகளை விமர்சிப்பதில் அதிக நியாயம் உள்ளது. ஏனெனில் இவர்கள்தான் தங்களைப் பகுத்தறிவின் ஏஜெண்டு களாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெரியாரின் இந்தக் கருத்தை இவர்களில் சிலர் வருடிக்கொடுத்து விமர்சிப்பதுபோல், நாடகமாடுவதுபோல் இந்து மதத்திலும் இராமர், கிருஷ்ணரை வருடிக் கொடுத்து விமர்சிப்பவர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.
எனவே தனக்குத்தானே முரண்பட்டு பெரியார் கூறியது சரி என்றால் அது பற்றி பகிரங்க விவாதத்துக்கு முன் வரவேண்டும்.
இல்லாவிட்டால் இந்த மடமையை அதற்குரிய கடுமையான சொற்களால் விமர்சித்து பெரியாரின் இந்த மூடக்கருத்தை நிராகரிக்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்.
தனக்குத்தானே முரண்படும் இவர்களின் மடமையை இன்ஷா அல்லாஹ் இன்னும் வெளிப்படுத்துவோம்.
- பீ. ஜைனுல் ஆபிதீன்
0 comments:
Post a Comment