Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Monday 15 November, 2010

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

உண்மை ஏட்டுக்குப் பதிலடி
தொடர் 4
மெய்யான விமர்சகரின் தகுதிகளுள் சில

பேனா பிடித்தவர்களெல்லாம் விமர்சக ராக முடியாது. அதற்கென்று சில தகுதிகள் உண்டு. ஆழமான விஷயஞானம், சரியான விஷயப்பார்வை மற்றும் ஆய்வுத் திறன் என்ற முப்பெரும் தகுதிகள் ஒரு விமர்சகருக்கு இன்றியமையாததாகும். உண்மை ஏட்டின் கட்டுரையில், இதில் எந்த ஒன்றாவது இருக்கிறதா? இவர்களின் ஆய்வுத்திறனும், விஷய ஞானமும் என்ன என்பதை முன் கட்டுரைகளில் கண்டோம்.

நபிகள் நாயகம் கற்பனைக் கதாபாத்திரமன்று. அவர் வாழ்ந்தது உண்மை என்று உணர்வு கூறும்போது, அதை மறுப்பதற்கு புராக் ஒரு கற்பனை விலங்கென்று கூறும் அளவிற்கு இவர்களுடைய விஷயப் பார்வையில் காமாலை குடிகொண்டு விட்டது. இந்த இலட்சணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளில் குற்றம் கூறத் துணிந்து விட்டனர். அதையும் தாண்டிச் சென்று இஸ்லாத்தின் பிரச்சாரகர்களை பெரியார் சவுக்கைக் காட்டி மிரட்டவும் செய்கின்றனர்!

நாத்திகப் பகுத்தறிவின் பொய் முகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயண தினத்தன்று நடைபெற்ற புராக் பயணத்தை விமர்சித்து நாத்திகப் பத்திரிகை மேலும் விமர்சிக்கப் போவதாக மிரட்டல் விட்டதும் இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக்கையைக் சார்ந்த ஆத்மா, மண்ணறை வாழ்க்கை, உயிர்த்து எழுதல், சொர்க்கம், நரகம், வானவர்கள் மற்றும் ஜின் இனத்தவர் போன்றவைக ளாகவே இருக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் நாம் வாழுகின்ற இந்த பவ்தீக உலகின் நூற்றுக்கணக்கான அறிவியல் உண்மைகளை திருக்குர்ஆன் பிட்டுப் பிட்டு வைத்திருந்தும் விமர்சகர்களின் கண்கள் அவைகளைப் புறக்கணித் துவிட்டு இஸ்லாத்தின் ஆன்மீக நம்பிக்கையைச் சுற்றி வட்டமிடுகிறது. இது ஏன்?

இஸ்லாத்திற்குச் சான்றளிக்கும் அறிவியல்

ஏனென்றால் திருக்குர்ஆன் கூறுகின்ற பவ்தீக உலகின் அறிவியல், மனித மூளையில் விளங்கிக் கொள்ளக் கூடியதாகும். இதன் காரணமாக திருக்குர்ஆன் கூறிய அறிவியல் உண்மைகள் முற்றிலும் சரியானவைகளே என்பதை நவீன விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக நிரூபித்துக் கொண்டு வருகிறது.

எனவே இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மார்க்கம் இல்லையென்றும் அது அறிவியல் சார்பான மார்க்கம் என்றும் நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்போது இக்கூற்றைத்தான் நாம் நிலைநிறுத்த வேண்டும். இல்லையென்றால் நம்மை எதையோ செய்து விடப்போவதாக பெரியார் தொண்டர்கள் சிலர் ஊளை இடுகின்றனர்.

பயங்கரவாதிகளாக மாறிவிட்ட சில சர்வதேச அதிகார மையங்களின் மிருகத் தனமான தாக்குதல்களையும் மீறி பிறப்பால் மட்டுமன்றி மனமாற்றமடைந்து வரும் மக்களால் தமது மக்கட் தொகையையும் நாளுக்கு நாள் பெருகச் செய்து, உலக இனங்கள் அனைத்திற்கும் மேலாக தலை நிமிர்ந்து நிற்கிறது இஸ்லாம். அப்படிப்பட்ட ஒரு மார்க்கத்தைப் பார்த்து இவ்வாறு ஊளையிடும் அளவிற்கு அறிவிலிகளாகிப்போன இந்தப் பெயர் தாங்கிப் பகுத்தறிவுவாதிகள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள்தான்.

தொலைக்காட்சியை ரசிக்கும் நாய்கள்

ஆன்மீக நம்பிக்கையைச் சார்ந்த அபவ்தீகப் பொருட்களையும், நிகழ்ச்சிக ளையும் குறித்த அறிவியல் அறிவு மனித குலத்தால் விளங்கிக் கொள்ள இயலாது என்பது உலகறிந்த உண்மை. இதை நாத்திகர்களும் நன்கு அறிந்துள்ளனர்.

இந்த தைரியத்தை மட்டுமே 'கை' முதலாக வைத்துக் கொண்டுதான் அபவ்தீக நிகழ்ச்சிகளுக்கு அறிவியல் ஆதாரம் கேட்டு அறிவியல் அபிமானிகள் போன்று நம்மிடம் இவர்கள் பாசாங்கு செய்கின்றனர்.

ஒரு வாதத்திற்காக ஏதேனும் ஓர் அபவ்தீக நிகழ்ச்சியின் அறிவியலை ஒரு வர் விளக்குவதாகவே வைத்துக் கொள்வோம். அப்போதாவது பகுத்தறிவின் பொய் முகம் தாங்கிய இஸ்லாத்தின் விமர்சகர்களால் அதை விளங்கிக் கொள்ள முடியுமா? ஒருக்காலும் முடியாது?

சான்றாக தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து படம் பார்க்கும் சில நாய்களை நாம் பார்த்து வருகிறோம். தம் வாழ்நாள் முழுவதும் அவை அப்பெட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த சாட்சாத் ஜெ.எல். பெயர்டே வந்து அப்பெட்டி எவ்வாறு இயங்குகிறது என அந்த நாய்களுக்கு பாடம் நடத்தினாலும் அந்த சின்னஞ் சிறு பெட்டிக்குள் காடும், மலையும், கடலும், வானும், கன்று காலிக் கூட்டங்களுமெல்லாம் எவ்வாறு வருகின்றன என்றோ அதன் பிறகு அவை எங்கு செல்கின்றன என்றோ அவைகளால் விளங்கிக் கொள்ள முடியாது!

பவ்தீக உலகின் உற்பத்திப் பொருளாகிய தொலைக்காட்சியின் தொழில்நுணுக் கம் (அறிவியல்) விலங்கினங்களுக்கு எவ்வாறு விளங்குவதில்லையோ அவ்வாறே அபவ்தீக உலகின் தொழில் நுணுக்கம் மனிதர்களாகிய நமக்கு விளங்காது.

இத்தொடரில் நாம் விவாதித்து வரும் செய்திகளை காய்தல் உவத்தலின்றிச் சிந்திப்பவர்களுக்கு மனித குலத்தின் ஆன்மீக நம்பிக்கையைச் சார்ந்த நிகழ்ச்சிகளின் அறிவியல் ஆதாரம் (தர்க்க ரீதியான நியாயங்கள் அன்று) கேட்பது வடிகட்டிய முட்டாள்தனம் என்பது எளிதாக விளங்கும். எனினும் பகுத்தறிவின் பொய் முகம் தாங்கிய நாத்திக சித்தாந்தம் இதை விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அச்சித்தாந்தம் அடிப்படையிலேயே ஒரு குறிப்பிட்ட அறியாமையை அடிப்படையாகக் கொண்டதே அதற்குக் காரணமாகும்.

எனவே அந்த அறியாமையை அடையாளம் காட்டாத வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துவிடும். எனவே நாத்திக சித்தாந்தத்தின் அடிப்படையாக விளங்கும் அறியாமையைச் சுருக்கமாகக் காண்போம்.

பதிலடி தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஏ.கே. அப்துர் ரஹ்மான்

0 comments: