Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Saturday 6 November, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 8

திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் உண்மை எனும் ஏடு இஸ்லாத்தையும், உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்ததாலும், முஸ்­ம்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாலும் போலி­ பகுத்தறிவாளர்களின் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக போலி பகுத்தறிவுவாதிகள் திகழ்கிறார்கள் என்பதைக் கடந்த ஏழு வாரங்களாக நாம் விளக்கி வருகிறோம்.


அந்த வகையில் திருமணம் என்பதே ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பெரியார் தானே திருமணம் செய்து தனது கொள்கையை மீறினார் என்ற முரண்பாட்டை சென்ற இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

அவர் மணியம்மையைத் திருமணம் செய்ததன் மூலம் தனது மற்றொரு உயிர் மூச்சான கொள்கையையும் தானே குழி தோண்டிப் புதைத்தார். மணியம்மையைத் திருமணம் செய்தபோது பெரியாரின் வயது 72. மணியம்மையின் வயது 26. அவ்விருவருக்கும் 46 வயது இடைவெளி இருந்த நிலையில்தான் அவர் மணியம் மையைத் திருமணம் செய்து கொண்டார்.

தக்க வயதை அடைந்தவர்கள் மன மொப்பி, வயதில் மூத்தவரைத் திருமணம் செய்வதை நாம் விமர்சிக்கவில்லை. இளம் பெண்ணை வயதானவர் திருமணம் செய்வது பற்றி பெரியார் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலேயே விமர்சிக்கிறோம்.

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களா தலால் கட்டுப்பட்டுத்தான் தீர வேண்டும் என்ற நிர்பந்த முறையில் நடப்பதும் சுய மரியாதை அற்ற திருமணம் என்றே சொல்லலாம்.
(குடியரசு 3-6-1928 இதழில் பெரியார்)

வயது பொருத்தம் இல்லாத திருமணமும், கட்டாயத் திருமணமும் சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்பது பெரியாரின் பிரச்சாரமாக இருந்தது.

வயதான சாமியார்கள் இளம் பெண்களை மயக்கி திருமணம் செய்வதைக்கே­ செய்தும், கண்டித்தும் தனது விடுதலை ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தவர் பெரியார்.

தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்த மனைய உடலே படைத்த வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளு மத வேட்கைக் கனையாலே தாக்கப்பட்டு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அவரின் வயது 72.

ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளை குட்டி, பேரன், பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன் திருமணம் செய்து கொள்ளலாமே''

(1940ல் விடுதலை நாளேட்டில் அண்ணா எழுதி பெரியார் வெளியிட்டது.)

1940ல் இப்படி எழுதிய பெரியார் ஆறு ஆண்டுகளில் அந்தப் பார்ப்பனக் கிழவருக்கு போட்டியாக பேத்தி வயதுடைய மணியம்மையை மணந்து கொண்டாரே! இப்படி நடப்பதுதான் பகுத்தறிவா?

குடியரசு இதழில் வெளியான கட்டுரைகளைத் தேடிப் பிடித்து விடுதலையில் வெளியிடும் பொறுப்பில் இருந்தவர் இராம அரங்கண்ணல்.

தான் பெரிதாக மதிக்கும் பெரியார் பொருந்தாத் திருமணம் செய்ததால் மனம் வெறுத்த அரங்கண்ணல் ''தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் லட்சியம்'' என்று குடியரசு ஏட்டில் பெரியார் எழுதியதை எடுத்து விடுதலையில் அச்சிட்டு வெளியாக்கி விட்டு பணியிலிருந்து விலகினாரே அவர்தான் பகுத்தறிவாளராகவும், சுயமரியாதைக்காரராகவும் காட்சியளிக்கிறார்.

பெரியாரின் பொருந்தாத் திருமணம் அன்றைக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பை அண்ணா அவர்கள் அன்று எழுதியதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அப்பா, அப்பா என்று அந்த அம்மை யார் மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிர அழைப்பதும் - அம்மா, அம்மா என்று கேட்போர் பூரிப்பும், பெருமையும் அடையும் விதமாக பெரியார் அந்த அம் மையாரை அழைப்பதும் - இக்காட்சியைக் கண்டு 'பெரியாரின் வளர்ப்பு மகள் இந்த மணியம்மை' எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது.


அந்த வளர்ப்புப் பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்! கையிலே தடி மண மகனுக்கு. கருப்பு உடை மணமகளுக்கு என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே! 'ஊருக்குத் தானய்யா உபதேசம்' என்று இடித்துரைக்கிறார்களே! எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் ஒரு காலை சுடு காட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். ''நான் செத்தால் அழ ஆள் இல்லை'' என்றெல்லாம் பேசிய பெரியார், ''கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா'' என்று கடைவீதி தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே! வெட்கப்படுகிறோம்.

அயலாரைக் காண வேதனைப்படுகிறோம். தனிமையிலே. பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு காரசாரமாக எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்.

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும், நமது உணர்ச்சிகளையும், கொள்கையையும், இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி நமது தலைவர் 72ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.

நம்மை நடைப் பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரி வித்து விட்டார். இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான் சாதாரணமானதென்று சொல்ல முடியும்? நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக ''இதோ தாத்தாவைப் பார்! வணக்கம் சொல்லு!'' என்று கூறுவர். கேட்டோம். களித்தோம். பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி தாத்தா பொண்ணு என்று கூறுவர். இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் - பணிவிடை செய்து வந்த பாவையுடன். சரியா, முறையா? என்று உலகம் கேட்கிறது. 
அன்புள்ள சி.என். அண்ணாதுரை
(திராவிட நாடு 3-7-1949)

அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணத்தை பெரியார் எந்த அளவு கண்டித்திருந்தால் அண்ணா இவ்வளவு கடும் எதிர்ப்பைக் காட்டியிருப்பார்.

உரத்த குரலில் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த லட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய்விட்டு விட்டது.
(அண்ணா - திராவிட நாடு 21-8-1949)

ஒரு கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஒரு தலைவரின் பின்னே செல்வதை ஏற்றுக் கொள்ளலாம். கொள்கைக்காக தலைவன் மீது கொண்ட பக்தி முற்றிப் போய் கொள்கையைவிட தலைவனே பெரிது என்று எண்ணினால் அவர்கள் மூட நம்பிக்கையாளர்களே தவிர பகுத்தறிவா ளர்கள் அல்லர்.


பெண்ணினத்துக்காக குரல் கொடுக்கிறார். வயதுப் பெண்களை சாமியார்கள் மயக்குவதைக் கடுமையாகச் சாடுகிறார் என்பன போன்ற காரணங்களுக்காக பெரியாரைத் தலைவராக ஏற்றவர்கள், பெரியாரே அக்கொள்கைக்கு சாவு மணி அடித்து சமாதி கட்டிய பிறகு அவர் பின்னே சென்றதும், சென்று கொண்டிருப்பதும் மூட பக்தியா? சிந்தனைத் தெளிவா?

அண்ணாவையும் அவருடன் வெளியேறியவர்களையும்தான் இந்த வகையில் பகுத்தறிவாளர்கள் என்று கூறலாமே தவிர இதன் பின்னரும் 'பகுத்தறிவுத் தந்தை' என்று பட்டம் சூட்டித் திரிபவர்களை பெரியாருக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கும் பக்தர்களாகத்தான் கருத முடியும்.

ஒருவர் மீது குருட்டுத் தனமாக ஒருவன் அன்பு வைத்து அவர் செய்த எந்தச் செயலும் அவனைப் பாதிக்கவில்லை என்றால் அவன் ஒருக்காலும் பகுத்தறிவைப் பயன்படுத்தியவனாக ஆக முடியாது.

போலி பகுத்தறிவாளர்களிடம் நாம் கேட்கிறோம்.. பெரியார் செய்ததுபோல் இன்று ஒரு 75 வயதுக் கிழவன் 20 வயதுக் குமரியை மணப்பது குறித்து உங்கள் பகுத்தறிவின் தீர்ப்பு என்ன?

இதுபோல் நடக்கும் திருமணங்களை இன்றும்கூட கேலி செய்து உங்கள் பத்திரிகைகளில் எழுதுகிறீர்களே! இதில் உள்ள பகுத்தறிவு தத்துவம்தான் என்ன?

பெரியாரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்தால் நாங்கள் எதிர்ப்போம்! கிண்டல் பண்ணுவோம்! என்று நடப்பது தான் பகுத்தறிவா?

- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்...

பீ. ஜைனுல் ஆபிதீன்

0 comments: