Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 9 September, 2010

வீணாகும் உணவு தானியங்கள்

மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
சமீபத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது வீணாகிப் போய்க் கொண்டிருக்கும் உணவு தானியங்கள் விஷயம். மத்திய அரசின் கையிருப்பில் 60 ஆயிரம் டன் உணவு தானியங்கள் (அரிசி, கோதுமை) உள்ளது. அத்தனையும் வீணாகிப் போனாலும் பரவாயில்லை...
ஏழை மக்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டோம் என்ற கொள்கையில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்திய மக்கள் தொகையில் 26 கோடியே 3 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இவர்களில் கிராமப்புறங்களில் 19 கோடியே 32 லட்சம் பேரும், நகரங்களில் 6 கோடியே 71 லட்சம் பேரும் வசிக்கின்றனர். 75 சதவீத ஏழை மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர் என்கிறது மத்திய அரசு அமைத்த குழு.
கடந்த 2004லி05ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தெண்டுல்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் உடல் நலம், கல்வி, சுகாதாரம், சத்துணவு, வருமானம் ஆகியவற்றை அளவீடாகக் கொண்டு மதிப்பிட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பிற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று மத்திய அரசால் எப்படி கூற முடிகிறது?
உணவு தானியங்களை வீணாக்கி ஏழை மக்களை பட்டினி போட்டுக் கொண்டிருக்கும் செயலிலிருந்து நாட்டின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று எப்படி மத்திய அரசால் பொய் கூற முடிகிறது. நம் நாட்டில் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஏழை மக்கள் எப்போது முன்னேறுவது.
இந்தக் கொள்கையில் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், பணக்காரர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். இதில் அரசியல்வாதிகளோ படுமோசம். தன்னுடைய சம்பளத்தை தானே உயர்த்திய கொடுமை உலகத்திலேயே இந்திய நாட்டில்தான் அரங்கேறியுள்ளது.
எம்.பி.க்களின் சம்பளம் 3 மடங்காக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டவர்களில் ஒருவர்கூட ஏழை மக்களுக்கு வீணாகிக் கொண்டிருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று சிறு குரல் கூட கொடுக்கவில்லை.
இவர்கள் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றப் போகிறார்கள். ஓட்டு வாங்க வரும்போது மட்டும் கையைப் பிடித்து, காலைப் பிடித்து, நடு ரோட்டில் உருட்டு பிரண்டு ஓட்டைப் பெறும் இவர்கள் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள்.

உணவு தானியங்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க போதிய வசதி இல்லையாம். சிரிப்பும், வெறுப்பும்தான் வருகிறது. பட்ஜெட் போடும்போது இராணுவத்திற்கொன்று 35லிருந்து 45 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யும்போது உணவு தானியங்களை சேமித்து வைக்க நிதி ஒதுக்கீடு செய்யவா முடியாது?
5 கோடி ரூபாய் செலவழித்தால் போதுமாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு தானியக் கிடங்குகளை ஏற்படுத்தி மாவட்ட வாரியாக உணவு தானியங்களைச் சேமித்து வைக்க முடியும். இல்லையென்றால் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அதன் கொள்ளலவுக்கு ஏற்ற வகையில் உணவு தானியங்களை அனுப்பி இருப்பு வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலான ரேஷன் கடைகள் காலியாகவே உள்ளன. கேட்டால் தானியங்கள் இன்னும் வரவில்லை என்றுதான் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கும்போது தேவையான தானியங்களை ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக் கொள்ளலாமே
அரசிடம் இல்லையென்றால் தனியார் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து பாதுகாக்க வேண்டியதுதானே? ஒவ்வொருவராகவா மத்திய அரசுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதுகூடத் தெரியாமல் மத்திய அரசை இவர்களால் எவ்வாறு ஆட்சி செய்ய முடிகிறது.

இது தெரியாமலில்லை. இவ்வாறு சேமிப்பதால் அதற்கு ஆகும் செலவை எப்படி ஈடுகட்டுவது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் ஏழையிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. பணக்காரன் என்றால் பல்லை இளித்துக் கொண்டு பணத்தைப் பிடுங்கலாம் அல்லவா?
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இது சம்பந்தமாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, ''உணவு தானியங்களை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள்? அவற்றை ஏழை, எளிய மக்களிடம் இலவசமாக கொடுத்து விடுங்கள்...'' என்று கூறியது. உடனே இதைப் பொறுக்காத மத்திய அமைச்சர் ஒருவர், ''இப்படி எடுத்த எடுப்பில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களைக் கொடுக்க முடியாது... என்றார்.
இவரின் பொறுப்பற்ற பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. அந்த தானியங்களை வீணாக்கி என்ன செய்யப் போகிறீர்கள். நாங்கள் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. எங்களின் கருத்தை உடனே ஏற்று ஏழைகளுக்கு உணவு தானியங்களை இலவசமாக கொடுக்க நடவடிக்கை எடுங்கள்... என்று உச்ச நீதிமன்றம் மத்திய அமைச்சருக்கு அறிவுரை வழங்கியது.

இப்படி அறிவுரை கொடுத்த பிறகும் நமது பாரதப் பிரதமர் ஒபாமா தலையாட்டி மன்மோகன் சிங்கும், ''உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கையில் வீணாகத் தலையிடுகிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய அரசுக்கு யாரும் அறிவுரை வழங்கத் தேவையில்லை... என்று உச்ச நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் ஏழைகளை சாகடித்தாலும் பரவாயில்லை உணவு தானியங்களை அவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக உள்ளனர். இப்படி தேவையில்லாமல் ஏழை மக்களை ஒதுக்கித் தள்ளுவதால்தான் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட், நக்ஸலைட் போன்ற பிரச்சினைகள்போல் ஏழை மக்கள் ஆங்காங்கே தனது சக்தியைக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
மாவோயிஸ்ட், நக்ஸலைட் எப்படி உருவாகினான் என்றால் இப்படித்தான். ஒரு நலத் திட்ட உதவி என்பது ஏழைகளுக்கத்தான் ஆரம்பிக்கப்படும். அந்த நலத் திட்ட உதவிகள் அவர்களைச் சென்றடையவில்லை என்றால் இப்படித்தான் வேண்டாத பல பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசின் மண்டையைச் சொறிய வைத்து விடும்.
வீணாக இப்படி பிரச்சினையை ஏற்படுத்தாமல் அரசியல்வாதிகள் ஆலோசனை செய்து ஏழை மக்களைக் காப்பாற்ற முன் வர வேண்டும். அவர்களின் அனைத்து வளர்ச்சிகளுக்குப் பின்னாலும் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும். இதுவே நமது வேண்டுகோள். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?

0 comments: