Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Friday 6 August, 2010

நாடும் நடப்பும் - 3

"செத்துப்போன ஒருத்தர் சாட்சியான கதை தெரியுமா உங்களுக்கு...?'' என்றபடியே வந்தார் பெரியார் பிரியன். "தெரியாதே! சொல்லுங்க யாரது...?'' எனக் கேட்டார் பாலா.

"கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு போலீசில் சாட்சி சொன்னாராம் மலஜி ஒடஜி மார்வாடிங்கிற ஒருத்தர். அவரை தனிக்கோர்ட் விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பி இருக்காங்க. ஆனால் ஆளு வரலை... இப்போ சுப்ரீம் கோர்ட் அவரை கண்டுபிடிச்சு அழைச்சுட்டு வர தனிக்குழுவை நியமிச்சுது.

உடனே விசாரணைக்கிடையில் அவர் இறந்திருக்கலாம்னு போலீஸ் அறிக்கையும் கொடுத்துட்டாங்க... ஆனா தனிக்குழுவோட விசாரணையில் அவரு சம்பவம் நடக்கிறதுக்கு ஏழு வருஷத்துக்கு முன்னாடி 1995லேயே இறந்துட்டாருன்னு தெரிஞ்சிருக்கு... என்று பெரியார் பிரியன் கூறி முடிப்பதற்குள்,
"கோத்ரா ரயில் எரிப்பு 2002ல் தானே நடந்துச்சு. அடப்பாவிகளா! முன்னாடி செத்தவர் பின்னாடி நடந்த சம்பவத்துக்கு சாட்சி சொன்னாரா? வேடிக்கையாதான் இருக்கு போங்க...'' என்று பீட்டர் கமெண்ட் அடித்ததும் நண்பர்கள் சிரித்தனர்.

"ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்னுட்டு எதுவுமே நடக்காதது மாதிரி இருக்கானுங்க. சாட்சிகளை மிரட்டுறானுங்க, மாத்துறானுங்க அந்த சம்பவங்கள் உங்களுக்கு வேடிக்கையா தெரியுதா...!'' என கோபப்பட்டார் ஃபாருக்.

"ஃபாரூக் பாய் விஷயத்தை கேட்போம். டென்சன் ஆகாதீங்க...'' என்ற பாலா, "நீங்க மீதியை சொல்லுங்க...'' என்றார் பெரியார் பிரியனை பார்த்து...
"கோத்ரா சம்பவத்தில் வாதாடி வரும் யூசுஃப் சர்க்காரு என்ற வக்கீல் இறப்பு சான்றிதழ் மற்றும் எல்லா ஆவணங்களையும் கோர்ட்டில் கொடுத்தாராம். இறந்துபோன ஒருத்தரை வச்சு சாட்சி செட்டப் பண்ணி இருக்காங்க. கோத்ரா ரயில் எரிப்பை முஸ்லிம்கள் செஞ்சதா காட்டுறதுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பிளான் பண்ணி இருக்காரு பாத்தீங்களா...!'' என்றார் பெரியார் பிரியன்.

புஷ்ஷூம் கிளிண்டனும் ஹெய்தியில்

"பிளான் பண்றதுல இவங்க ரொம்ப கில்லாடிகள் தானே! இங்க இப்படி நடக்குது. அமெரிக்காவிலே ஒரு மோடி இருந்தாரே! செருப்படி புஷ்.. அவரு பண்ணின கூத்து தெரியுமா...?'' சொல்றேன் கேளுங்க என்ற பீட்டர்,

"பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதி மக்களுக்கு உதவுவதாக கூறி அமெரிக்க முன்னாள் அதிபர்களான கிளின்டனும், ஜார்ஜ் புஷ்ஷும், கிளிண்டன் புஷ் நிவாரண நிதி' என பெயரிட்டு ஹைதிக்கு உதவ போவதாக அறிவிச்சிருந்தாங்க.
கோடிக்கணக்கில் நிவாரண உதவிகள் குவிந்ததும் அதை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் கிளிண்டனும், புஷ்ஷும் கலந்திருக்காங்க... அப்போ புஷ் அந்த ஹைதி மக்களுக்கு கை கொடுத்தாராம், தொட்டு ஆறுதல் சொன்னாராம்... சிரிச்சுகிட்டே இருந்தாராம்... இதெல்லாம் எப்போ தெரியுமா? காமிராவுக்கு முன்னால். ஆனால் காமிராவுக்கு பின்னால் என்ன செய்தாரு தெரியுமா? என பீட்டர் நிறுத்த...
"அட இதில் வேற சஸ்பென்ஸா? சீக்கிரம் சொல்லுங்க தலைவா'' என்றார் பாலா. "அந்த மக்களை தொட்ட கையை முகத்தை சுளிச்சுகிட்டே வெறுப்போட துடைச்சாராம். அதுவும் கிளிண்டனோட சட்டையில். அதை காமிராக்காரங்க படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பிட்டாங்க...'' என்றார்.
"புஷ்ஷின் பொய் முகத்தை தோலுரிச்சு காட்டிட்டாங்கன்னு சொல்றீங்க இல்லையா...?'' என்ற பெரியார் பிரியன், "இன்னைக்கு நாட்டு நடப்பை அலசுறதை விட உலக நடப்பை அலசுவோம் எனக் கூற...

கழிவறை கூட தலைகீழாக

"அப்போ நான்தான் ஃபர்ஸ்ட்...'' என வேடிக்கையாக சொன்ன ஃபாரூக்,
 "அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகளை பெற்ற நாதியா சுலைமான் என்கிற பெண் வறுமையால் ரொம்ப கஷ்டப்படுறாராம்... எட்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாம சிரமப்படுறாராம்... குடியிருக்கிற வீடும், கை விட்டுப் போகிற நிலைமையில் இருக்காம். அந்த பொண்ணுடைய கஷ்டத்தை கேடயமா வச்சு சில கம்பெனிக்காரனுங்க நீலப்படத்துல நடிக்கவரியான்னு கூப்பிடறானுங்க... எவ்வளவு பணம் வேணுமின்னாலும் தர்ரோம், நீலப்படத்துல நடிக்கிறியா கேட்கிறானுங்களாம். அந்த பொண்ணு முடியாது, போங்கடான்னு துரத்தி விட்டுடுச்சு...'' என்றார்.


"மேற்கத்திய நாடுகளுக்கு விபச்சாரம், ஆபாசம் எல்லாம் புதுசில்லை. அது இல்லாம இருந்தாத்தான் புதுசு. போனவாரம் ஆஸ்திரேலியா சிட்னியில் ஒரு போட்டோ கிராஃபர் போட்டோ எடுத்தாராம். எப்படி தெரியுமா? சிட்னியில் சுமார் 5000 ஆண்களையும், பெண்களையும் நிர்வாணமா நிக்க வச்சு போட்டோ எடுத்திருக்கார் அவர்...'' என்று பீட்டர் கூற...

சிட்னியில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக
"என்னத்தை சொல்றது? புதுமை, நாகரீகம்னு சொல் லிட்டு பழங்காலத்துக்கே போகு துங்க. ஆதிகாலத்தில் தான் மனுசன் ஆடையில்லாம இருந் தானாம். விலங்குகள்தான் ஆடையில்லாம திரியும். இவங் களும் இப்போ ஆடையில்லாம விலங்குகளை போலாகி கற் காலத்துக்கு போயிட்டாங்க போல... எல்லாமே தலைகீழா மாறிபோச்சு...'' என்றார் பாலா.
"ஆமா... ஆமா! எல்லாமே தலைகீழ்தான்...'' என பொடி வைத்து பேசிய ஃபாரூக், "ஜெர்மனியில் ஒரு வீடு கட்டி இருக்காங்க. எல்லாமே தலைகீழ். வெளியே இருந்து பார்க்கும்போது ஒரு வீட்டை தூக்கி அப்படியே தலைகீழா கவிழ்த்தி வச்சதுபோல இருக்கு. உள்ளே போய் பார்த்தா அங்கேயும் தலைகீழ்தான். வீட்டுக்கூரை கீழே இருக்கு... என்று ஃபாரூக் கூறிக்கொண்டிருக்க குறுக்கிட்ட பாலா, "என்னது தலைகீழ வீடா...'' என்றார்.

தலைகீழ் வீடு

"அதுமட்டுமில்ல... தரை மேலே இருக்கு. டைனிங் டேபிள் மேலே இருக்கு. குளிக்கிற ரூம், வாஷ் பேசின், கக்கூஸ் எல்லாமே மேலே டாப்பிலே இருக்கு. வரவேற்பறைக்கு வந்தா உட்காரக் கூடிய சேர் மேலே இருக்கு... என்ன கொடுமையடா இது? எந்த கிறுக்கு பய கட்டுன வீடு இதுன்னு கேட்டா... ஆமா இந்த வீட்டோட பேரு கூட 'கிறுக்கன் வீடு'தான்னு சொல்றாங்க. அட எப்படிடா இங்கே இருப்பாங்கன்னு கேட்டா.. உங்களை எவன் இருக்க சொன்னான், இது வசிப்பதற்கில்லை.. பார்ப்பதற்கு மட்டுமேன்னு சொல்றாங்க. வேடிக்கையான உலகமப்பா...'' என்றபடியே நடையை கட்டினார் ஃபாரூக்.

- எம்.எம்.
நன்றி : உணர்வு வார இதழ்


0 comments: